நடிகர் விதார்த் நடித்த ’லாந்தர்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
காவல்துறை அதிகாரியாக இருக்கும் விதார்த் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, காவலர் ஒருவர் சந்தேகத்திற்குரிய ஒருவரை சாலையில் பார்க்கிறார். உடனே அவர் விதார்த்துக்கு தகவல் கொடுக்க விதார்த் அவசர அவசரமாக அந்த இடத்தில் வந்த போது அனைவரையும் தாக்கி விட்டு அந்த மர்ம நபர் தப்பித்து சென்று விடுகிறார். அந்த மர்ம நபர் யார்? சாலையில் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? அவரது பின்னணி என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.
குறும்படம் எடுப்பவர்கள் கூட தற்போது தரமான கதை மற்றும் காட்சி அமைப்புடன் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில கோடிகளை செலவு செய்து எடுத்து இருக்கும் இந்த படத்தில் ஒரு காட்சி கூட உருப்படியாக இல்லை என்பது படம் பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். வலுவான கதை இல்லாமல், திரைக்கதையும் சொதப்பலாக இருக்கும் இப்படி ஒரு படத்தில் நடிக்க விதார்த் எப்படி ஒப்புக்கொண்டார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
’மைனா’ ’குற்றமே தண்டனை’ ’குரங்கு பொம்மை’ உள்ளிட்ட தரமான படங்களில் நடித்த விதார்த்தின் இந்த படத்தின் தேர்வு என்பது மிகவும் துரதிஷ்டமே. சீரியஸான காட்சிகளை கூட சிரிக்க வைக்கும் அளவுக்கு இயக்குனர் கோமாளித்தனமாக படத்தை இயக்கியுள்ளார். இயக்குனருக்கு இது முதல் படம் என்ற நிலையில் அவருக்கு ஒரு திரைப்படம் எடுக்க இன்னும் சில படங்களில் உதவி இயக்குனராக அனுபவம் தேவை என்பது தெரிய வருகிறது.
இந்த படத்தில் இருக்கும் ஒரே ஆறுதல் விதார்த் நடிப்பு தான், ஒவ்வொரு காட்சியையும் உணர்ந்து நடித்துள்ளார், ஆனால் அவரது மனைவியாக நடித்த சுவேதா அழகாக இருந்தாலும் நடிப்பு சுத்தமாக வரவில்லை, மேலும் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்த சஹானாவும் கேரக்டருக்கு சரியாக பொருந்தவில்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் உள்ள கார் சேஸிங் காட்சிகள் மட்டும் ஒளிப்பதிவாளர் தயவில் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதற்கான பின்னணி இசை சொதப்பலாக உள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் என்ற பெயரில் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து பார்வையாளர்களை சோதிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஷாஜி சலீம்.
Listen News!