தமிழ் திரையுலகத்தின் என்றும் மாறாத பாரம்பரியம் ஒன்று உள்ளதென்றால் அது இசையும் அவ் இசையை தழுவிய திரையிசை பாடலும் தான்.தற்போது பாடலின் வெற்றிக்கு இசை தேவையா? வரிகள் தேவையா? என்றெல்லாம் போட்டிகள் நடந்தாலும் வரிகளுடனான இசையின் கூடலே திரையிசைப் பாடல்களுக்கு ஆதாரமாய் அமைகின்றன.
அந்த வகையில் தமிழ் திரைப் பாடல்களின் வரலாற்றில் யாராலும் மறந்துவிடவோ இலகுவில் கடந்துவிடவோ முடியாத வரிகளுக்கு சொந்தக்காரன் கவிஞர் நா.முத்துக்குமார்.குறிப்பாக நா.முத்துக்குமாரின் பாடல்களில் இசை நம்மை தாலாட்டும் கனதியான வரிகள் யாவும் நம்மை சிந்திக்க தூண்டுவன.
தமிழ் திரைப்பாடல்களில் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் பாடல்களை எழுதியிருக்கும் நா.முத்துக்குமார் தன் வரிகளை சிறப்பாக இசையினுள் ஒழித்து விடுவார் என்றே சொல்லலாம்.நம்மை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அப் பாடல்கள் அடுத்து தமிழின் அருமையை எண்ணி நம்மை பெருமையையும் கொள்ள செய்திருக்கும்.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மற்றும் நா.முத்துக்குமார் கூட்டணி யாராலும் மறக்க முடியாத மற்றும் வெறுக்க முடியாத பாடல்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்திருந்தது."தங்க மீன்கள்" மற்றும் "சைவம்" திரைப்படத்திற்காக தேசிய விருதுகளை வாங்கினார் கவிஞர் நா.முத்துக்குமார்.
நா.முத்துக்குமாரின் பாடல்களை தாண்டிய ஓர் வெற்றியென்றால் அது அவர் தன் மகனுக்கு எழுதிய கடிதம்.அவர் மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதிய கடிதம் பகவானின் கீதை போன்று அவைவரும் படிக்க வேண்டிய ஓர் வேதமென்றே சொல்லலாம்.2011 ஆம் ஆண்டில் அவர் எழுதிய அக் கடிதம் 2016இல் அவரின் இறப்பின் பின் பெரிதும் பகிரப்பட்டு அன்றைய நாளிலேயே பெரும் வைரலானது.
தன் மகனுக்கு வாழ்க்கையின் சாரத்தை வலுப்பட சொல்லியிருந்த நா.முத்துக்குமார் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி இறைவனின் அழைப்பில் இவ் உலகை நீங்கினார். நா.முத்துக்குமாரின் நினைவு நாளான இன்றும் அவர் வரிகள் காற்றோடு கலந்து எவனோ ஒருவனின் உறக்கத்திற்கு தாலாட்டு பாடுகிறது.
Listen News!