நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’SK23’ படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருப்பதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’SK23’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு சல்மான் கான் படத்தை இயக்க ஏஆர் முருகதாஸ் செல்ல இருப்பதால் இந்த படத்தை அதிகபட்சமாக அடுத்த மாதத்திற்குள் அவர் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் பிசினஸை தொடங்கி விட்டதாகவும் முதல் கட்டமாக ஆதித்யா மியூசிக் நிறுவனம் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை 16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் - அனிருத் இணைந்தாலே அந்த படத்தில் உள்ள பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகும் என்பதால் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சாட்டிலைட் உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட இந்த படத்தின் 100 கோடி ரூபாய் பிசினஸ் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்தா நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!