தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை நீலிமா ராணி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’நம்ம கூட இருப்பவர்கள் தான், நமக்கு துரோகம் செய்வார்கள்’ என்றும் ’நமது எதிரிகள் கூட நமக்கு நேருக்கு நேர் தான் மோதுவார்கள், ஆனால் கூட இருப்பவர்கள் தான் நம் முதுகில் குத்துவார்கள்’ என்றும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
நடிகை நீலிமா ராணி, சிவாஜி கணேசன் கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதனை அடுத்து அவர் சில திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானார். 
’மெட்டி ஒலி’ ’கோலங்கள்’ ’பவானி’ ’செல்லமே’ ’தென்றல்’ ’வாணி ராணி’ உட்பட பல சீரியல்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் அவரது சீரியல்கள் மிகப் பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை நீலிமா ராணி, இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
இந்த நிலையில் நீலிமா ராணி சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் தான் நம் முதுகில் குத்துவார்கள், உடனே செய்து விட மாட்டார்கள், அவர்கள் நம்மை போல் இல்லை என்பதற்காக இவ்வாறு அவர்கள் செய்வார்கள். நம்ம பக்கத்திலே இருப்பார்கள், நீங்கள் மிகவும் சூப்பராக இருக்கிறீர்கள், வீட்டையும் பார்த்து கொண்டீர்கள், குழந்தையும் பார்த்து கொள்கிறீர்கள் என்று நம் முன் புகழ்ச்சியாக பேசுவார்கள். அதன்பின்னர் நம் முதுகுக்கு பின் நம்மை பற்றி இகழ்வாக பேசுவார்கள். 
இது எனக்கே பலமுறை நடந்துள்ளது. அவர்கள் புகழ்வதை பார்த்து நானே, ஆமாம் நாம் எல்லாவற்றிலும் வெற்றி கரமாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் நமக்கு முதுகு பின்னால் பேசுவதை கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். 
எனவே நமக்கு நெருக்கமானவர்கள் துரோகம் செய்வார்கள் என்பதை தெரிந்து கொண்டு பழக ஆரம்பிக்க வேண்டும். தயவுசெய்து துரோகத்திற்கு பழக ஆரம்பியுங்கள், அது நம்மை தேடி வரும், வேற வேற முகக்களில், வேற வேற கோணங்களில் வரும், எனவே துரோகம் நமக்கு யாரும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள், கண்டிப்பாக உங்களுக்கு நெருக்கமானவர்கள் துரோகம் செய்வார்கள், அந்த துரோகத்தை எதிர்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்’ என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்..
 
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!