தமிழ் சினிமா மற்றும் மாடலிங் துறையில் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவராக அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருபவர் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெரும் ஊடக கவனத்தை பெற்ற இவர், அதன் பின்னும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தியதுடன், பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பையும் சந்தித்தார்.
பட்டியலின சமுதாயத்தினர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டுகள் எழுந்ததும், மீரா மிதுன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது சமூக ஒற்றுமையை புண்படுத்தும் வகையில் இருந்ததாக கூறி, பல்வேறு அமைப்புகள் காவல்துறைக்கு புகார் அளித்தன. இதன் தொடர்ச்சியாக, மீரா மிதுன் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு காவலில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியேறினார்.
அதன்பின், தன்னுடைய தவறிற்கு மன்னிப்பு கேட்டும் இருந்தார். ஆனால் அதுவும் சர்ச்சையை அடக்கவில்லை; பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின.

அவருக்கு எதிரான வழக்கின் விசாரணை நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டது.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, தன்னுடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 20 மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீரா மிதுன் கூறியுள்ளார். இந்த உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும், தனக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இது போன்ற கோரிக்கையை விசாரணை நடைபெறும் நீதிமன்றத்திலேயே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்பதே அதன் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!