தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் இறுதியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்திற்கு உலகமெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் கிடைத்தன.
இப்படத்தில் கொமரம் பீமாக நடித்துள்ள ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இவர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோட் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது.
இதற்கான பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜக சார்பில் பரப்புரை மேற்கொள்ள அமித்ஷா நேற்று அங்கு வந்திருந்தார். பரப்புரை முடித்த பின்னர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் சந்திப்பு மேற்கொண்ட அமித்ஷா, அவரிடம் சுமார் 30 நிமிடங்கள் உரையாடிவிட்டு சென்றார்.
அவர்கள் இருவரும் இந்த சந்திப்பின் போது ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பேசியதாக தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கூறினாலும், இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஜூனியர் என்.டி.ஆர் அரசியல் குடும்பத்து வாரிசு என்பதாலும், அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதாலும், அவரை பாஜக பக்கம் இழுக்கவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!