நடிகர் அஜித்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பழைய திரைப்படங்களில் இடம்பெற்ற மூன்று பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இளமை இதோ இதோ,ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி இவை மூன்றும் இளையராஜா இசையமைத்த, ஏற்கனவே வெளியான திரைப்படங்களில் இடம்பெற்றவை. இவை 'குட் பேட் அக்லி' படத்தில் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, இளையராஜாவின் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியதற்காக 5 கோடி இழப்பீடு மற்றும் அவற்றை படத்தில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம், "பாடல்களை பயன்படுத்த சட்டபூர்வ உரிமையாளர் அனுமதி அளித்தார்" என பதிலளித்தாலும், அந்த உரிமையாளர் யார் என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.
வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இளையராஜாவின் இசையில் வெளியான மூன்று பாடல்களை 'குட் பேட் அக்லி' படத்தில் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Listen News!