ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ’சிங்கம்’ படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நான்காவது பாகம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் ஹரி பதில் அளித்துள்ளார்.
சூர்யா, அனுஷ்கா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’சிங்கம்’ படத்தின் முதல் பாகம் கடந்த 2010 ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2013ஆம் ஆண்டும், மூன்றாம் பாகம் 2017 ஆம் ஆண்டும் வெளியானது, 3 பாகங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், வசூலையும் வாரி குவித்தது என்பதையும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் எப்போது வரும் என்ற கேள்விக்கு அவர் பலமுறை பதில் அளித்துள்ளார் என்பதும் நான்காவது பாகம் எப்போது என்பது குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை, காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறியதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியின் போது இயக்குநர் ஹரி இதே கேள்விக்கு மீண்டும் பதில் கூறியுள்ளார். ’சிங்கம்’ நான்காவது பாடம் உருவாகுமா என்று எனக்கே தெரியவில்லை, கிரிக்கெட்டில் மூன்று பந்தில் விக்கெட் எடுத்தால் ஹாட்ரிக் என்றுதான் கூறுவார்கள், நான்காவது பந்தில் விக்கெட் எடுத்தால் அதற்கு பெயர் கிடையாது, நான்காவது விக்கெட் என்றுதான் சொல்லுவார்கள். எனவே மூன்று பாகங்களுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்று கூறினார்.
மேலும் ‘சிங்கம் 4’ என்ற டைட்டில் வைத்துவிட்டு வேறு ஏதாவது கதையை படமாக்குவதில் எனது உடன்பாடு இல்லை என்றும் உண்மையாகவே அதன் தொடர்ச்சி கதை இருந்தால் மட்டுமே ’சிங்கம்’ நான்காம் பாகம் வரும் என்று தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் எனக்கு இன்னொரு போலீஸ் படம் எடுக்க வேண்டும் என்ற ஐடியா இருக்கிறது என்றும் அதற்கான திரைக்கதை எழுதும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேட்டியில் இருந்து ’சிங்கம்’ நான்காவது பாகம் இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிய வருகிறது.
Listen News!