• Jun 08 2026

பிச்சைக்காரன் வெற்றியை மீண்டும் தொடுமா?… களமிறங்கும் ‘நூறு சாமி’

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது கலைப்பயணத்தைத் தொடங்கி, பின்னர் நடிகராக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள விஜய் ஆண்டனி, தற்போது மீண்டும் இயக்குநர் சசியுடன் இணைந்து ‘நூறு சாமி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘பிச்சைக்காரன்’. அந்தப் படம் அவரை நடிகராக மட்டுமல்ல, மக்கள் மனதில் நிலைத்திருக்கும் ஹீரோவாகவும் மாற்றியது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற “நூறு சாமிகள் இருந்தாலும்...” பாடல் இன்று வரை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

அந்த உணர்வின் தொடர்ச்சியாகவே, இயக்குநர் சசி தனது புதிய படைப்பிற்கு ‘நூறு சாமி’ என்ற தலைப்பைத் தேர்வு செய்துள்ளார். கிராமத்து மண்வாசனையும், மனித உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கை போராட்டங்களை பேசும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.


இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளன.

இந்த படத்தில் இருந்து ‘மாய கனவோ’, ‘அம்மா அம்மாதான்’ மற்றும் ‘ரீங்காரா’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதுடன், வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘நூறு சாமி’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று  மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பிச்சைக்காரன்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள சசி - விஜய் ஆண்டனி கூட்டணி, இந்த முறையும் ரசிகர்களின் இதயங்களை வெல்லுமா என்ற கேள்வி தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement