தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டின் முன்பு எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கண்ணீருடன் கடிதம் எழுதி வைத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிற்கு வந்த அந்த பெண், தனது மனவேதனைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இன்னும் முழுமையாக கிடைக்காததால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது. காங்கிரஸ் ஆதரவை தொடர்ந்து, 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் பட்டியல் வழங்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஆட்சியமைக்க அதிகாரபூர்வ அழைப்பு வராத சூழல் பேசுபொருளாக உள்ளது.
இந்த நிலையில், பூந்தமல்லி அருகே கரையான்சாவடியை சேர்ந்த வினோதினி என்ற கர்ப்பிணி பெண் விஜயின் வீட்டிற்கு வந்து கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், “சிறுவயதிலிருந்தே விஜய் அண்ணாவின் தீவிர ரசிகை நான். குறிப்பாக துள்ளாத மனமும் துள்ளும் படம் பார்த்த பிறகு அவர் மீது அதிக பாசம் ஏற்பட்டது. அவர் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக தேர்தலில் வாக்களித்தேன். கோயில்களிலும் பிரார்த்தனை செய்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது குடும்ப வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார். தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். “என்னை வீட்டில் உள்ளவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவள் என்கிறார்கள். எனக்கு தூக்கம் இல்லை, சாப்பிட முடியவில்லை. விஜய் அண்ணா இந்த கடிதத்தை பார்த்து என் பிரச்சினைக்கு உதவ வேண்டும்.” என கண்ணீருடன் பேசியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி, பலரும் அந்த பெண்ணின் நிலை குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!