தமிழ் திரைப்பட உலகில் பல நடிகர்கள் மற்றும் நகைச்சுவை கலைஞர்கள் தங்களுடைய அனுபவங்களையும் நினைவுகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது நடிகர் கொட்டாச்சி பகிர்ந்த ஒரு பழைய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கூறியதாக அவர் தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் கொட்டாச்சி, தன்னுடைய சினிமா பயணத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அந்த சம்பவத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் விவேக் ஆகியோர் இடையே நடைபெற்ற உரையாடலை அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில்," என்னடா நீ வர்றவனையெல்லாம் இப்படி வளர்த்துவிட்டிட்டு இருக்கேன்னு வடிவேல் சார் விவேக் சார் கிட்ட கேட்டாரு. அதுக்கு விவேக் சார் 'டேய் அவங்களை யாரும் வளர்த்துவிடல, அது அவனோட திறமை. ஒருத்தனுக்கு இந்தச் சினிமால சாப்பாடு கிடைக்கணும்னு விதி இருந்தால் அது கண்டிப்பாக கிடைக்கும்.
அதை நீயோ நானோ நினைச்சா கூட தடுத்து நிறுத்த முடியாது. பாவம்யா எல்லாரும் பொண்டாட்டி பிள்ளைகளை ஊர்ல விட்டிட்டு, சினிமாவுக்காக பசி, பட்டினியா இருந்து இவ்வளவு கஷ்டப்பட்டு வர்றாங்க. அவங்க திறமைக்கு அவங்க வளருவாங்க. அவ்வளவு தான் அப்படின்னு சொன்னாரு." என்று தெரிவித்திருந்தார்.
இந்த வார்த்தைகள் திரையுலகின் உண்மையான நிலையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். சினிமா உலகில் முன்னேறுவதற்கு திறமை, உழைப்பு மற்றும் பொறுமை மிகவும் முக்கியமானவை என்பதைக் காட்டும் வகையில் விவேக் கூறிய இந்த கருத்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
Listen News!