நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த உயர்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில், அது திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகியபோது, தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதாக தகவல் வந்தது. தற்போது கிட்டத்தட்ட 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஆட்சி அமைக்க இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தங்களது 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு வழங்குவதாக கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஏனைய கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
ஆளுநரிடம் தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், மே 7ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த பதவியேற்பு விழா தற்போது ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜயின் அரசியல் நகர்வு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியான உடனே விஜயின் இல்லம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக உயர்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கேதரின் டிரைவ் பகுதி முழுவதும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக அவர் பதவியேற்கும் போது மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!