தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார் குறித்து பலருக்கும் தெரியாத ஒரு உண்மையை தயாரிப்பாளர் காஜா மொய்தீன் சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அஜித்தின் வாழ்க்கை போராட்டங்களும், அவர் கடந்து வந்த கஷ்டங்களும், அவர் இன்று எட்டியுள்ள நிலையையும் வெளிப்படுத்தும் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

1990களின் இறுதி பகுதி அஜித் தனது கரியரில் போராடிக் கொண்டிருந்த காலம். அந்த நேரத்தில் ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தை தயாரிக்க இருந்த காஜா மொய்தீன், அஜித்திடம் கால் ஷீட் கேட்க அவரைச் சந்திக்க சென்றதாகக் கூறினார்.
அவர் சென்றபோது அங்கு பார்த்த காட்சி, அவரை அதிர்ச்சியடையச் செய்ததோடு, மனதை உருக்கும் வகையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, அஜித்தை சந்திக்கச் சென்ற காஜா மொய்தீன், அங்கு இருந்த ஒரு தெலுங்கு புரொடியூசர், ஏதோ ஒரு விஷயத்திற்காக அஜித்தை மிகவும் கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார் என்று கூறினார்.

மேலும் அவர், " அஜித் சார் அழுதிட்டு இருந்தார். தெலுங்கு புரொடியூசர் போனதுக்கு அப்புறம் கண் எல்லாம் தொடச்சிட்டு, எனக்கு கொஞ்சம் கடன் இருக்கு.... 22 லட்ஷம் கிடைக்குமான்னு என்னிடம் கேட்டார். அடுத்த நாளே அவருக்கு சிங்கள் பேமென்ட்டா கொடுத்தோம்.
அந்த சமயத்தில அவர் முதுகில ஆப்பிரேசன் பண்ணிக்க போய்ட்டார். அதனால பிரசாந்தை கமிட் பண்ணோம். பிறகு அஜித்தை பார்க்க ஹாஸ்பிடல் போனா... அந்தப் படத்தில பிரசாந்த் நடிக்கிறார்னு விளம்பரத்தை பேப்பரில காமிச்சு.. என் கையை பிடிச்சு அழுது... நான் திரும்ப வரமாட்டேனு நினைச்சீங்களா.? இந்தப் படத்தை நான் தான் பண்ணனும் என்று அழுதார். அதுக்கப்புறம் அவருக்காக காத்திருந்து அந்தப் படத்தை எடுத்தோம்." எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தை கேட்ட ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் தயாரிப்பாளரின் இந்த வார்த்தைகள், ஒரு நடிகர் தனது வாழ்க்கையின் கடினமான தருணத்தைக் கடந்து, தன்னம்பிக்கை இழக்காமல், தனது கடமையில் உண்மையாக நின்றிருப்பதனை வெளிப்படுத்துகின்றது.
Listen News!