நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்சினையால் இழுபறி நிலையில் காணப்படுகிறது. இது விஜய்யின் இறுதி படம் என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில், ஜன நாயகன் படம் இன்றைய தினம் (9) மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) மறு ஆய்வுக் குழுவின் முன்பு திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் முதலில் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் தொடர்பான சிக்கல்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் KVN புரொடக்ஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தது.

பின்னர் மறு ஆய்வுக் குழுவை அணுக முடிவு செய்ததால் தயாரிப்பாளர் தரப்பு அந்த வழக்கை வாபஸ் பெற்றது. தற்போது மறு சென்சார் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதத்திலேயே வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், நடிகர் விஜய் அரசியலில் செயல்பட்டு வருவதால் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரமும் படத்தின் வெளியீட்டில் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Listen News!