• May 06 2026

தமிழ் சினிமாவின் தூண் சரிந்தது.! ஆர்.பி. சவுத்ரி இனி இல்லை! திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Aathira / 51 minutes ago

Advertisement

Listen News!

நடிகர் ஜீவாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி. சவுத்ரி (வயது 72) ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்த இவரது மறைவு திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.பி. சவுத்ரி  தனது சொந்த ஊரான உதய்பூருக்கு காரில் சென்றபோது ஜோத்பூர் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் சுவரில் பலமாக மோதியுள்ளது.

இதன்போது காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. எனினும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தற்போது அவரது உடல் இன்று சென்னை தியாகராயநகர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

93-க்கும் மேற்பட்ட இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த இவர், புது வசந்தம், பூவே உனக்காக, சூரிய வம்சம், திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட எண்ணற்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர்.


இந்த நிலையில், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதன்படி அவர்கள் வெளியிட்ட பதிவுகள் வருமாறு,

நடிகர் ரஜினிகாந்த் — "என் அருமை நண்பர் ஆர்.பி. சவுத்ரி தலைசிறந்த தயாரிப்பாளர், அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவரது அகால மரணம் எனக்கு பேரதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது."

நடிகர் கமல்ஹாசன் — "தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாக திகழ்ந்தவர். சினிமாவில் புது முயற்சிகளுக்கு தயங்காத துணிச்சல்காரர். சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்கு சரணாலயமாக இருந்தவர் இப்படி பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர்."

நடிகர் சரத்குமார் — "புகழ்பெற்ற தயாரிப்பாளரும், எனது நண்பரும், வழிகாட்டியும், தத்துவஞானியும், எனது நட்சத்திர அந்தஸ்திற்குக் காரணமானவருமான அவர், மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு கார் விபத்தில் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்கள். இந்தியத் திரைப்படத்துறைக்கு குறிப்பாகப் பல தசாப்தங்களாக அவர் உருவாக்கிய திரைப்படங்களின் வாயிலாக அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்." 

இயக்குனரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் — "ஆர்.பி.சவுத்ரி ஐயாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். 'சூப்பர் குட் பிலிம்ஸ்' எனக்கு ஒரு ஆலயமாகத் திகழ்ந்தது; எனது கலைப் பயணத்தை வடிவமைத்த ஒரு கடவுள் போன்ற ஆளுமையாக அவர் விளங்கினார். அவருக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இது ஒரு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஐயா. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்." 

நடிகர் விஷால் —  "மிகவும் அதிக எண்ணிக்கையிலான படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஐயா அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். படப்பிடிப்புப் பணிகளுக்கு மத்தியில், இந்தச் செய்தியை என்னால் சற்றும் ஜீரணிக்க இயலவில்லை. வார்த்தைகள் ஏதுமின்றித் திகைத்து நிற்கிறேன். வாழ்க்கை மிகவும் நிலையற்றது. இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளர் அவர். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். ஜீவா, ஜிதன் ரமேஷ், சுரேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் துயர இழப்பிலிருந்து மீண்டு வர, இறைவன் அவர்களுக்குத் துணிவையும் மன உறுதியையும் வழங்கட்டும்." 

நடிகை குஷ்பு — "நமது மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரும், ஒரு உன்னதமான பண்பாளருமான ஆர்.பி.சவுத்ரி சார் இனி நம்முடன் இல்லை என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். அவரது அகால மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் திரையுலகில் மிகவும் மதிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். எப்போதும் புன்னகை தவழும் முகத்துடனும், உறுதியான கைகுலுக்கலுடனும் இருந்த ஒரு மனிதராக அவரை நினைவில் கொள்வேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி" 

நடிகர்  சந்தானம் - "தென்னிந்தியத் திரையுலகின் தொலைநோக்குச் சிந்தனையாளரான தயாரிப்பாளரும், எனக்கும் திரையுலகில் உள்ள இன்னும் பலருக்கும் வழிகாட்டியாகவும் துணையாகவும் திகழ்ந்தவருமானவரின் மறைவால், நான் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஆர்.பி.சவுத்ரி அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்"

நடிகர் சதீஷ் - "புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி ஐயாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்."

Advertisement

Advertisement