விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே பல்வேறு சட்ட சிக்கல்களில் சிக்கி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் அதே நேரத்தில் கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. விஜயின் அரசியல் பயணத்திற்கு முன் வெளியாகும் கடைசி திரைப்படம் என்பதால், ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் விவகாரம் ஆரம்பத்திலிருந்தே அதிக கவனம் பெற்றுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி விளம்பரங்கள், முன்பதிவுகள் மற்றும் விநியோக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை குழு (CBFC) சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, கடைசி நேரத்தில் படம் வெளியாகாமல் தடைப்பட்டது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த விசாரணை, மாலை 4 மணி வரை நீடித்தது. இந்த விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் சார்பிலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பிலும் வக்கீல்கள் ஆஜராகி, தங்களது வாதங்களை விரிவாக முன்வைத்தனர்.

விசாரணையின் போது, தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ஜனநாயக திரைப்படம் அரசியல் கருத்துக்களை அடிப்படையாக கொண்டிருந்தாலும், அது எந்தவிதமான சட்ட மீறலையும் கொண்டதாக இல்லை என்றும், பார்வையாளர்களைத் தூண்டக்கூடிய வகையில் எதுவும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. மேலும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதில் தாமதம் செய்வது, தயாரிப்பு நிறுவனத்துக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல்கள், படத்தின் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து குழுவுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அவை பொதுநலன் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டவையா என்பதில் ஆய்வு தேவைப்படுவதாகவும் வாதிட்டனர். இதனால் உடனடியாக சான்றிதழ் வழங்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களும் நீண்ட நேரம் நடைபெற்ற நிலையில், அனைத்து வாதங்களும் நிறைவடைந்ததாக நீதிமன்றம் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, எந்தத் தேதியும் குறிப்பிடாமல், தீர்ப்பை ஒத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
நீதிமன்றத்தின் இந்த முடிவால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் ரிலீஸ் தவறியுள்ள நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாததால், புதிய ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து தெளிவற்ற நிலை தொடர்கிறது.
Listen News!