தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'லப்பர் பந்து' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக இருக்கும் அட்டகத்தி தினேஷ், அவருக்கு நிகராக சிறந்த ஆட்டகாராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞரான ஹரிஷ் கல்யாண் இருவருக்குமிடையே நடக்கும் போட்டிகள், பொறாமைகள், சரிக்குச் சரி நின்று தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் .
இத்திரைப்படத்தைப் பார்த்திருக்கும் கிரிக்கெட் வீரரான அஷ்வின், 'லப்பர் பந்து' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து கூறியிருக்கும் அஷ்வின், "திரைப்படம் எடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. பலரின் கடின உழைப்பு அதில் அடங்கியிருக்கிறது. அதனால், நான் எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதில் இருக்கும் குறைகளைச் சொல்லவதில்லை. நல்ல விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன்.
இருப்பினும், ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்; பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டு சார்ந்த ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். சமீபமாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் ஒரே மாதிரியாக, கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டுத்தான் எடுக்கப்படுகின்றன. ஒரு விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு உதராணமாக இருக்கின்றன.
படத்தில் ஒரு கதாபாத்திரம்கூட தேவையற்றதாக இருக்கவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதாமாக, யதார்த்தமாக இருந்தது. இந்த அற்புதமான படைப்பை உருவாக்கிய இயக்குநர் மற்றும் படக்குவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
Listen News!