• Apr 25 2026

ஒரு செயலில் உலக அழகியான பத்மா.! காலை தொட்டு வணங்கி கௌரவித்த பார்த்திபன்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சென்னை மாநகராட்சி, தி.நகர் பகுதியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் பத்மா, கடந்த மாதம் சாலையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறை உதவியுடன் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். அவரது இந்த நேர்மையான செயல் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றதுடன், பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லலிதா ஜுவல்லரி உரிமையாளர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டியிருந்தனர். 

இந்த நிலையில், இயக்குநர் பார்த்திபன் தாம் கலந்து கொண்ட கல்லூரி விழாவிற்கு பத்மாவை சிறப்பு விருந்தினராக அழைத்து, அவருக்கு பாதணி அணிவித்து, கிரீடம் சூட்டி, பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்.


இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், “தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.

வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, ‘உலக அழகி’ என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பார்த்திபனின் இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பத்மாவின் நேர்மை மேலும் பல பாராட்டுகளுக்கு தகுதியானது என சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன

Advertisement

Advertisement