• Jun 05 2026

25 நாள் விஜய் ஆட்சில உருப்படியா ஒன்னும் செய்யல..! வெற்றி பெற்ற மனநிலையுடன் பேசிய உதயநிதி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதன்போது பேசிய அவர், "இந்த தேர்தல் முடிவு நாங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களே எதிர்பார்க்காத முடிவு. இருந்தாலும் இந்த தோல்வி நிரந்தரமானது அல்ல. மீண்டும் வெற்றி பெற்று காட்டுவோம்" என்றார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கிடைத்த வெற்றிக்கு காரணம் தானல்ல என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களோடு நேரடியாக பணியாற்றிய நிர்வாகிகளும் தொண்டர்களும்தான் காரணம் என்றும் உதயநிதி கூறினார்.


இந்த நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார். அதன்படி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை குறிப்பிட்டு பேசிய உதயநிதி, 

புதிய அரசு பொறுப்பேற்று 25 நாள் ஆகுது. உருப்படியா ஒரு திட்டமாவது கொண்டு வந்திருக்கீங்களா? ஒரு திட்டம்கூட கிடையாது. ஸ்டிக்கர் மாத்துறதையும், பெயர் மாற்றுறதையும் தவிர மக்களுக்காக புதுசா எதுவும் நடக்கல.

நாம தேர்தல்ல தோற்றதுக்கு காரணம் மக்களை நம்பினது இல்ல. நம்ம வீட்ல இருக்கிறவங்களுக்கு நம்ம சாதனைகளை சொல்ல மறந்துட்டோம். அதுதான் நம்ம தவறு.


களத்துல உண்மையான எதிரி யாருன்னு தெரியாம இல்லாத எதிரியோட சண்டை போட்டுட்டோம். அங்கதான் மிஸ் பண்ணிட்டோம். இனிமேல் அந்த தவறை திருத்திக்கிட்டு உண்மையான எதிரியை எதிர்கொள்வோம்.

தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி திட்டங்கள் தேவை. பஞ்ச் டயலாக்ஸும் ரீல்ஸும் வேண்டாம். மக்கள் எதிர்பார்ப்பது பாதுகாப்பும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதும்தான்.

எதுக்கு கேட்டாலும் திமுகதான் காரணம், திமுக சதி பண்ணுது என்பதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா மக்கள் இப்போ தொலைக்காட்சி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, சட்டமன்ற விவாதங்களையும் கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுதான் இவர்களோட வீழ்ச்சிக்கான ஆரம்பம்.

திமுக பல வெற்றிகளையும் பார்த்திருக்கிறது, பல தோல்விகளையும் பார்த்திருக்கிறது. எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் மீண்டு எழுந்து நிற்போம். மீண்டும் தலைவர் M. K. Stalin தலைமையில் ஆட்சி அமைப்போம்.. என்று உறுதிபட தெரிவித்தார்.

Advertisement

Advertisement