• Jun 17 2026

கடும் விமர்சனங்களால் அதிர்ந்த மகேந்திரன்... வெளியிட்ட புதிய வீடியோ!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள மின்தடை விவகாரத்தில் நடிகர் மகேந்திரன் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு அளித்த நேர்காணலில், தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட மின்தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த மகேந்திரன், “இவ்வளவு நாள் மின்சார வசதியோடு இருந்தவர்கள், சில மாதங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா?” என்று கூறியிருந்தார். 

மேலும், “தேவைப்பட்டால் என் வீட்டிலிருந்தே மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றும், “சோலார் முறைகளை அதிகம் பயன்படுத்தலாமே” என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு, பல தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பையும் சந்தித்தன.

மின்தடை காரணமாக அன்றாட வாழ்க்கை, தொழில்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை இலகுவாக எடுத்துரைத்ததாக குற்றம்சாட்டிய பலர், மகேந்திரனின் கருத்தை கடுமையாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியாகின.

இந்த நிலையில், தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடிகர் மகேந்திரன்.


அதில் அவர் கூறுகையில், நான் பொதுமக்களை குறிவைத்து பேசவில்லை. மின்தடையை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் சிலரைக் குறித்துதான் அந்த கருத்தை கூறினேன். மக்களின் பிரச்சினையை நான் எப்போதும் சிறுமைப்படுத்தவில்லை.

மேலும், முதல்வர் விஜய் ஆறு மாத கால அவகாசம் கேட்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பின் காரணமாகத்தான் நான் அப்படி பேசியிருந்தேன். ஆனால் அது வேறு விதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

சோலார் சிஸ்டம் என்று சொன்னேன். உண்மையில் சோலார் பவர் என்று சொல்ல வேண்டியது. எனது வார்த்தைப் பயன்பாட்டில் பிழை ஏற்பட்டது. கொச்சி விமான நிலையம் முழுமையாக சூரிய மின்சக்தியை பயன்படுத்தி இயங்குவதை பார்த்தபோது, இதுபோன்ற முயற்சிகளை நாமும் மேற்கொள்ளலாமே என்ற எண்ணத்தில்தான் நான் அந்த கருத்தை தெரிவித்தேன்.


அதேபோல், என் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற தனது கருத்து குறித்து பேசிய அவர், நானும் உங்களைப் போலவே மின்தடையால் பாதிக்கப்படுகிறேன். மக்களின் கஷ்டத்தை ஏளனப்படுத்தும் நோக்கில் அந்த வார்த்தைகளை நான் கூறவில்லை. உதவ வேண்டும் என்ற மனநிலையில்தான் அப்படி சொன்னேன் என்றார்.

சமூக வலைதளங்களில் தன்னை ‘திமிர்பிடித்தவர்’, ‘மக்களின் வலியை புரிந்து கொள்ளாதவர்’ என்று விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் மகேந்திரன் கவலை தெரிவித்து உள்ளார்.

அதன்படி, இன்று நான் ஒரு வேளை உணவு சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு காரணம் மக்கள். அவர்களை எப்படி நான் அவமதிப்பேன்? என்னுடைய பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த மின்தடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ள மகேந்திரனின் விளக்கம், தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement