நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ளதாக கூறப்படும் “ஜன நாயகன்” திரைப்படம், ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் ரீதியிலும் இந்த படத்துக்கு அதிக கவனம் நிலவியது.
ஆனால், இப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே, ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த படம், பல காரணங்களால் வெளியாகவில்லை.
இதற்கு சென்சார் தொடர்பான சிக்கல்கள் முக்கிய காரணமாகக் கூறப்பட்டு, அந்த விவகாரம் நீதிமன்றத்திலும் நீண்டுவரும் நிலையில் காணப்பட்டது.
இதற்கிடையில், “ஜன நாயகன்” திரைப்படத்தின் ஓடிடி உரிமையை Amazon Prime Video நிறுவனம் கைவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் பரவின. படம் திட்டமிட்டபடி வெளியாகாததால், தயாரிப்பு தரப்பிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த மாதத்திலும் படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும், மே அல்லது ஜூலை மாதங்களில் தான் திரையரங்குகளில் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஜன நாயகன் ஓடிடி வெளியீடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் ஜி5 கௌஷிக். சமீபத்தில் நடைபெற்ற “காக்கி சர்க்கஸ்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், “படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதி இன்னும் உறுதியாகவில்லை. அதனால் ஓடிடி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. படம் வெளியாகும் நேரத்தில் இதுகுறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், படத்தின் தாமதத்தால் ஓடிடி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் படத்தை பார்வையிட வேண்டும் என சென்சார் குழு பரிந்துரைத்ததாகவும் பரவிய தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதி எதுவும் இல்லை என அவர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Listen News!