• Jun 05 2026

‘தனி வழி.. குனியாது தல..’ சிக்மா பாடலில் அரசியல் சிக்னல்.? குஷியில் விஜய் ரசிகர்கள்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகராக அல்லாமல் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியுள்ள முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது தனது முதல் படமான ‘சிக்மா’ மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். விஜய்யின் தீவிர ரசிகராக அறியப்படும் இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளதால் படத்தின் இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு நிலவியது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் ‘சிக்மா ஸ்டைல்’ என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் சிறப்பம்சமாக நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லாவுடன் இணைந்து ஜேசன் சஞ்சயும் நடனமாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகத் தொடங்கியது. குறிப்பாக பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளன.

“பதவி மேல் ஆசை இல்லை... தியேட்டர் தெறிக்கும் மச்சி” என்ற வரியை விஜய் ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் “தனி வழி”, “அந்த ஆண்டவன் என் பக்கம்”, “குனியாது தல நெவர் எவனுக்கும்” போன்ற வரிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


இந்த வரிகள் விஜய்யின் அரசியல் பயணம், அவரது திரைமுகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ள பிம்பத்தை நினைவூட்டுவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிரமாண்டமான அணியை உருவாக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக்‌ஷன் மற்றும் மாஸ் அம்சங்கள் நிறைந்த படமாக உருவாகி வரும் ‘சிக்மா’, வரும் ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முதல் பாடலே இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன. குறிப்பாக ஜேசன் சஞ்சயின் இயக்கம், தமனின் இசை மற்றும் சந்தீப் கிஷனின் நடிப்பு ஆகியவை படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

Advertisement

Advertisement