தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், சர்வதேச கார் பந்தய வீரராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் அஜித்குமார், தற்போது மீண்டும் தனது ரேஸிங் பயணத்தை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் அஜித்தின் தாயார் காலமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தனது தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்த அஜித், “அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக இருந்தார். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியத்தின் உருவமாக வாழ்ந்தார். அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகள் என்றும் எங்களுடன் இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த இழப்பின் வலி இன்னும் நீங்காத நிலையில், வெறும் நான்கு நாட்களிலேயே தனது தொழில்முறை கடமைகளுக்குத் திரும்பியுள்ளார் அஜித். அடுத்த வாரம் பிரான்ஸில் நடைபெறவுள்ள முக்கிய கார் பந்தயத்தில் பங்கேற்க அவரது அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

இதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை அஜித்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதனுடன் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கனத்த இதயத்துடன் மீண்டும் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால் வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்” என்ற வாசகம் ரசிகர்களின் மனதை நெகிழச் செய்துள்ளது.
நடிகர் அஜித்தைப் பொறுத்தவரை, சினிமா மற்றும் கார் ரேஸிங் என இரு துறைகளிலும் ஆபத்துகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர். பல முறை ரேஸிங் விபத்துகளால் காயமடைந்த போதிலும், தனது கனவை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை. அதேபோல் படப்பிடிப்புகளிலும் பல சவால்களை சந்தித்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் மேலும் வலிமையுடன் திரும்பி வந்துள்ளார்.

தற்போது தாயின் மறைவு போன்ற மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பை சந்தித்த பின்னரும், தனது பொறுப்புகளை முன்னிறுத்தி மீண்டும் ரேஸிங் களத்திற்குத் திரும்பியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மரியாதையையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
'வாழ்க்கை எந்த அளவுக்கு சோதித்தாலும் முன்னேற வேண்டும்' என்ற செய்தியை தனது செயலின் மூலம் அஜித் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
பிரான்ஸில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் அஜித் மற்றும் அவரது அணி எப்படிப்பட்ட சாதனையை படைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Back at work with a heavy heart but life must go on!#AjithKumarRacing #AK #AjithKumar #AjithRedantRacing @Akracingoffl pic.twitter.com/FIYOs2dKdH
— Ajithkumar Racing (@Akracingoffl) June 4, 2026
Listen News!