தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான செய்தியாக கவிஞரும் பிரபல பாடலாசிரியருமான வைரமுத்து அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து பல அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வைரமுத்துவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் இலக்கியத்திற்கும் திரைப்பட பாடல்களுக்கும் அவர் செய்த பங்களிப்பை பாராட்டி பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களும் தனது X பக்கத்தில் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது பதிவில், “நம் இந்திய நாட்டின் மதிப்புமிக்க ஞானபீட விருதை பெற்றிருக்கும் எனது அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ரசிகர்கள் பலரும் அந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டனர். அதே சமயம், சிலர் இதற்கு எதிராகவும் கருத்துக்களை பகிர ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் பிரபல பாடகியான சின்மயி இந்த பதிவுக்கு தனது எதிர்வினையை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவை ரீட்வீட் செய்த அவர், “அய்யோ புரியவே புரியாதா” என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.
சின்மயியின் இந்த பதிவு வெளியானதும் சமூக வலைத்தளங்களில் அது வேகமாக வைரலாகியது. சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பலர் இதை விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!