பான் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பிரபாஸின் ‘பவுஜி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீர் விபத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளது. ஐதராபாத்தில் நடந்த இந்த கோர விபத்தில் படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எச். ராஜமௌலியின் ‘பாகுபலி’க்கு பிறகு, பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் இந்திய அளவில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில், பிரபாஸ் மற்றும் இமான்வி இணைந்து நடிக்கும் ‘பவுஜி’ படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இந்தப் படத்தின் முக்கிய கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள புகழ்பெற்ற ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பவுஜி படப்பிடிப்புக்காக நேற்று முன்தினம் அதிகாலை படக்குழுவினர் தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வேன் ஒன்றில் கிளம்பியுள்ளனர். வழக்கம்போல ஒரு சாதாரண பயணமாக தொடங்கிய அந்தப் பயணம், சில நிமிடங்களில் பேரதிர்ச்சியாக மாறியுள்ளது.

ஐதராபாத்துக்கு வெளியே உள்ள அப்துல்லாபூர்மெட் அருகே சென்றபோது, தூப்ரன்பேட் பாலம் பகுதியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர சிமெண்ட் தடுப்பு கட்டைகளில் மோதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் சிக்கியவர்களுள் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்திருந்த 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சவுட்டுப்பல் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேன் அதிவேகமாக இயக்கப்பட்டதா, வாகனத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதா அல்லது அதிகாலை நேர பயணத்தின் காரணமாக டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த எதிர்பாராத விபத்து காரணமாக ‘பவுஜி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் படக்குழுவினரிடையே பெரும் சோகமும் பதற்றமும் நிலவி வருகிறது.
Listen News!