ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல பாடல் திறன் போட்டி நிகழ்ச்சியான ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்’ சீசன் 5-இன் மாபெரும் இறுதிப் போட்டி கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.. பல மாதங்களாக பல்வேறு சுற்றுகளின் மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி, ‘கிராண்ட் ஃபினாலே’ என்ற பெயரில் நிறைவடைந்தது.
இறுதிப் போட்டியில் சுமன் ராஜ், தன்வி, வர்ஜா, விஷ்ணுவர்தன், அபிஷேகா, அக்சத் நிரூபம் உள்ளிட்ட ஆறு திறமையான போட்டியாளர்கள் கலந்து கொண்டு தலா இரண்டு பாடல்களைப் பாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பிரபல பின்னணிப் பாடகர்களான ஸ்ரீனிவாஸ், சைந்தவி, ஸ்வேதா மோகன் மற்றும் எஸ்.பி.பி. சரண் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்’ சீசன் 5-இன் நடுவர்களின் மதிப்பெண்கள் மற்றும் பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் அபிஷேகா முதலிடம் பெற்று ‘டைட்டில் வின்னர்’ பட்டத்தை வென்றார். விஷ்ணுவர்தன் இரண்டாம் இடத்தையும், தன்வி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதற்கிடையில், இலங்கையைச் சேர்ந்த போட்டியாளரான வர்ஜாவின் பயணம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. கே.பி. சுந்தராம்பாள் பாடிய ‘பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா’ பாடலை பாடி போட்டிக்குள் நுழைந்த வர்ஜா, தனது தனித்துவமான கணீர் குரல் மற்றும் கடினமான பாடல்களை தைரியமாக பாடிய திறமையால் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த வர்ஜா, நிகழ்ச்சியின் ஒவ்வொரு சுற்றிலும் தனது திறமையை நிரூபித்து இறுதிச் சுற்று வரை முன்னேறினார். இறுதிப் போட்டியிலும் டி.ஆர். மகாலிங்கம் பாடிய ‘இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை’ பாடலை சிறப்பாக பாடி பாராட்டுகளை பெற்றார்.
முதல் மூன்று இடங்களில் வர்ஜா இடம்பெறுவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இறுதி முடிவில் அவர் டாப் 3 பட்டியலில் இடம் பெறாதது இலங்கை தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து பலரும் தங்களது ஆதங்கத்தையும், வர்ஜாவுக்கு பாராட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!