• Jun 04 2026

1 லட்சம் பாக்கி கேட்ட பிரஜின்.. ஆனா ஏமாந்தது நாங்கதான்! பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பிரஜின், பிக் பாஸில் கலந்துகொண்டு தனக்கென மேலும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.. அத்துடன் இவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. 

அந்த வகையில் பிரஜின் நடிப்பில் தற்போது 'அந்தரன்' படம் வெளியாக உள்ளது. இந்த படம் எதிர்வரும் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் அதில் பிரஜின், அந்த படத்தின் ஹீரோயின் வராமையினால் தயாரிப்பாளர் கொதித்து எழுந்துள்ளார்.

அதன்படி, குறித்த படத்தின் ஹீரோ பிரஜின் மற்றும் ஹீரோயின் இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்காததை தொடர்ந்து, தயாரிப்பாளர் தரப்பினர் மற்றும் திரைப்படத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மேடையிலேயே கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


இதன்போது நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தரப்பினர், "இந்த படத்தோட ஹீரோ பிரஜின் வரல... ஹீரோயினும் வரல. இப்படி ஒரு படத்தை எடுத்து நாங்க எப்படி காப்பாத்துறது? நேத்து அரை மணி நேரம் பிரஜின்கிட்ட நானே பேசுனேன். வர்றேன்னு சொன்னாரு. ஆனா இன்னைக்கு வரல," என்று குற்றம்சாட்டினர்.

மேலும் பிரஜின் தொடர்பாக அவர்கள் கூறுகையில், "நேத்து அவர்கிட்ட பேசும்போது, 'எனக்கு 1 லட்சம் பாக்கி இருக்கு சார்'ன்னு சொன்னாரு. உடனே யாரு பாக்கி வச்சது என்று கேட்டோம். அதுக்குப் பிறகு போன்ல பேசினோம். ஆனா இப்ப வரவே இல்ல. பேசுறதுக்குக் கூட வரமாட்டேங்கறாரு," என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மேடையில் பேசிய சங்க நிர்வாகி ஒருவர், "ஒரு தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு பணம் போட்டு படம் எடுக்கிறார். படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ஹீரோ வரல, ஹீரோயின் வரல, இயக்குநர் வரலன்னா அந்த படத்தை யார் காப்பாத்துவாங்க?" என்று கேள்வி எழுப்பினார்.


அவர் தொடர்ந்து, "சினிமாவுல யாரையும் ஏமாத்தி படம் எடுக்காதீங்க. தெரியாம பணம் போடுற தயாரிப்பாளர்களை சிலர் ஆசை காட்டி கூட்டிட்டு வந்து நடு ரோட்டுல விட்டுடுறாங்க. அதுதான் இங்க நடந்திருக்கு," என்றார்.

மேலும், "நேத்து பிரஜின்கிட்ட நானும் பேசினேன். 'நீங்க வரலைன்னா எங்க சங்கத்துல உங்களை வைத்து படம் எடுக்க முடியாது'ன்னு சொன்னேன். அது மிரட்டல் இல்ல. தயாரிப்பாளருக்கு நியாயம் கிடைக்கணும் என்பதற்காக சொன்னது," என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தயாரிப்பாளர் தரப்பினர், "சினிமா பற்றி எதுவும் தெரியாத ஒரு பில்டரை இயக்குநர் ஆசை காட்டி படம் எடுக்க வைத்திருக்கிறார். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். இப்போ அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை," என குற்றம்சாட்டினர்.

அதே நிகழ்ச்சியில் நடிகர் பைஜான் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, "நானும் இதே மாதிரி ஒரு படத்தில் ஏமாந்தவன் தான். என்னோட பணம் போயிடுச்சு. ஆனா தன்னம்பிக்கையால்தான் மீண்டு வந்தேன். எல்லா இயக்குநர்களும் கெட்டவர்கள் கிடையாது. 100 பேரில் 99 பேர் நல்லவர்கள். ஒரு சிலரால்தான் முழு சினிமாவுக்கும் கெட்ட பெயர் வருகிறது," என்றார்.

மேலும், திரைப்படத் துறையில் புதிதாக முதலீடு செய்ய வருபவர்கள் கட்டாயம் சங்கங்களின் ஆலோசனையை பெற்று செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இத்தகைய பிரச்சனைகளில் சிக்க நேரிடும் என்றும் மேடையில் வலியுறுத்தப்பட்டது.

இந்த பரபரப்பான பத்திரிகையாளர் சந்திப்பில், ஹீரோ பிரஜின் மற்றும் இயக்குநர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளன. இதற்கு அவர்கள் தரப்பில் இருந்து என்ன விளக்கம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement