• Aug 24 2026

ஆஸ்கர் இவருக்குத்தான்.! சுவாசிக்காவுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த வித்தியாசமான விருது?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் சசி - விஜய் ஆண்டனி கூட்டணி, தற்போது 'நூறு சாமி' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. 

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்ததோடு, தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக சுவாசிகா நடித்துள்ள நிலையில், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நூறு சாமி, நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை முன்கூட்டியே பார்த்த பல திரைப் பிரபலங்கள் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நடிகை சுவாசிகாவின் நடிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது கதாபாத்திரம் படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இயக்குநர் மிஷ்கின், சுவாசிகாவின் நடிப்பை பாராட்டி அவருடைய காலில் விழுந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல் நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் தனது யூடியூப் நிகழ்ச்சிக்கு சுவாசிகாவை அழைத்து, பூங்கொத்து வழங்கி பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சிறப்புக் காட்சிக்குப் பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, தனது சினிமா பயணத்தில் முதல் முறையாக கிடைத்த ஒரு பாராட்டைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறுகையில், நான் இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படமும் வெளியான பிறகும் கதை நன்றாக இருக்கிறது, படம் நன்றாக இருக்கிறது என்றுதான் பாராட்டுவார்கள். ஆனால், என் நடிப்பை குறிப்பாக பாராட்டியவர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில், என்னுடைய நடிப்பைப் பற்றி அதிகம் பேசப்படும் படம் நூறு சாமி தான் என்று அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.


அதோடு நிற்காமல், நடிகை சுவாசிகாவின் நடிப்பை உச்சக்கட்டமாகப் பாராட்டிய விஜய் ஆண்டனி, தேசிய விருதுக்கு மேலான அங்கீகாரம் ஏதாவது இருந்தால் அது சுவாசிகாவுக்கு வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டால் அதற்கும் அவர் தகுதியானவர் என்று புகழாரம் சூட்டினார்.

அப்போது மேடையில் இருந்த தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்த விஜய் ஆண்டனி, அதையே 'இந்திய ஆஸ்கர்' விருதாக கற்பனை செய்து சுவாசிகாவிடம் வழங்கினார். எதிர்பாராத இந்த செயல் அரங்கில் இருந்த அனைவரையும் சிரிப்பிலும் கைதட்டலிலும் ஆழ்த்தியது. சுவாசிகாவும் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.

படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சுவாசிகாவின் நடிப்பும் விஜய் ஆண்டனியின் இந்த பாராட்டும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement