குறிப்பிடத்தக்க பாராட்டைப் பெற்றுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், அதன் வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை மற்றும் காட்சியமைப்பால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் மாதவன் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் திரைப்படத்தை பார்த்து மிகவும் ரசித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தின் திரைக்கதை, கண்களைக் கவரும் வகையிலான விசுவல் கதை சொல்லல் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவை தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் மாதவன் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு இப்படத்தை பார்த்து வாய்விட்டு சிரித்ததுடன், பல காட்சிகளில் ரசித்துக் கைதட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ள மாதவன், அவர்களுக்கு எழுந்து நின்று கைதட்டும் மரியாதையை சமர்ப்பிப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், ‘மொத ராத்திரி’ திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று என்றும் அவர் பாராட்டியுள்ளார். முன்னணி நடிகரான மாதவனின் இந்தப் பாராட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!