செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தவறாகப் பயன்படுத்தி போலி மற்றும் ஆபாசமான உள்ளடக்கங்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நடிகைகளின் முகங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப்-ஃபேக் வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், மிருணாள் தாக்கூர், பிரீத்தி ஜிந்தா, தபு உள்ளிட்ட பலரும் இதுபோன்ற டிஜிட்டல் மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களின் தனியுரிமை, நற்பெயர் மற்றும் ஆளுமை உரிமை பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுட்டமல்லி’ பாடல் காட்சிகளை சிலர் AI தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்து ஆபாசமான முறையில் சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு, ஜான்வி கபூருக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு பெண் டிஜிட்டல் முறையில் அவமதிக்கப்படும் போது மற்றொரு பெண்ணாக தான் அமைதியாக இருக்க மாட்டேன் என தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற AI மார்பிங் வீடியோக்கள் நகைச்சுவையோ பொழுதுபோக்கோ அல்ல என்றும், அவை கொடூரமானதும் வெட்கக்கேடானதுமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, தெரிந்தே பகிர்ந்து பரப்புபவர்களும் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும் என குஷ்பு வலியுறுத்தியுள்ளார். “ஜான்வி கபூர், நான் உங்களுடன் நிற்கிறேன். வலிமையாக இருங்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!