• Mar 26 2026

இயக்குநரை இழந்தாலும்.. அவர் குழந்தையை படிக்கவைக்கிறேன்.! - ஜோகிபாபு

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

ஜியோ ஹாட் ஸ்டார் உருவாக்கியுள்ள புதிய திரைப்படம் "கெணத்த காணோம்". ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். சமூக நையாண்டி மற்றும் உணர்ச்சி கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் பார்வையாளர்களை சந்திக்க உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் யோகி பாபு, இந்தப் படத்தில் மையக் கதாபாத்திரமாக தோன்றுவது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அவருடன் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா பணியாற்றியுள்ளார். படத்தின் உணர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் இசை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இப்படக்குழு செய்தியாளர்களை சந்தித்து படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய யோகி பாபு, தனது மனநிலையை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் நெகிழ வைத்தது. “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி. சுரேஷ் சங்கையாவை எனக்கு ‘காக்கா முட்டை’ படத்தில் இருந்தே தெரியும். ‘கிடாயின் கருணை மனு’ படத்தில் என்னை நடிக்க வைக்க அவர் விரும்பினார். ஆனால் அப்போது தேதிகள் பிரச்சனை இருந்ததால் நடிக்க முடியாமல் போனது,” என்று அவர் கூறினார்.

அவர் தொடர்ந்து, “அதற்குப் பிறகு என்னை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்று சுரேஷ் சங்கையா இந்தக் கதையை கொடுத்தார். அது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்தப் படத்திற்காக இயக்குநர் நிறைய விஷயங்களை லைவாக செய்தார். எப்போதும் அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். ஆனால் நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். அவர் எப்போதும் நம்முடன் தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியது போல், அந்தக் குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன்,” என்றார்.

யோகி பாபுவின் இந்த உரை நிகழ்ச்சியில் இருந்தவர்களை உணர்ச்சிவசப்பட செய்தது. இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் திடீர் மறைவு திரைப்படத்துறைக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement