தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகம் சார்பில் பல இடங்களிலும் மக்களை நேரில் சந்தித்துப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சைக்கிளில் மக்களை சந்தித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த நேரம், திடீரென சைக்கிளிலிருந்து குதித்து ஓடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, விஜய் சைக்கிளில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதன்போது கூட்டத்திலிருந்த ஒருவர் விஜயை நோக்கி மர்ம பொருள் ஒன்றை வீசினார். அது தன் மீது பட போவதை உணர்ந்த விஜய், அந்த வினாடியே அதிர்ச்சியடைந்து சைக்கிளை விட்டுவிட்டு விரைந்து நகர்ந்தார். உடனடியாக பாதுகாப்புப் படையினர் அவரை சூழ்ந்து பாதுகாத்தனர்.

அதற்குப் பின்பு விஜய் மீது வீசப்பட்டது பயங்கரமான பொருள் அல்ல என்பது உறுதியானது. அது பூக்களால் நிரப்பப்பட்ட பலூன் என்பது தெரியவந்தது. அந்தப் பொருள் விஜய் மீது பட்டவுடன் வெடித்து பூக்கள் சிதறின. அவருடைய ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் விஜய் பயந்து ஒதுங்கினார் என்று ஒரு தரப்பினரும், பாதுகாப்பு கருதி தற்காப்புடன் செயல்பட்டார் என்று இன்னொரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
மக்களை மிக நெருக்கமாக சந்தித்து வரும் விஜயின் இந்தச் சைக்கிள் பரப்புரை பெரும் வரவேற்பு பெற்றாலும், பாதுகாப்பு ரீதியான சம்பவங்களும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!