தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நடிகைகளில் ஒருவராக திகழும் சிம்ரன், பாலிவுட் சினிமாவில் ஏன் அதிகமாக நடிக்கவில்லை என்பது குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய சிம்ரனுக்கு, பலமுறை இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாய்ப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அங்கிருக்கும் சிலர் தென்னிந்திய நடிகர்களின் சாதனைகளையும், அவர்களின் பாரம்பரியத்தையும் மதிப்பதே இல்லை. அது என்னை மிகவும் பாதித்தது” என்று கூறியுள்ளார்.
மேலும், “நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சினிமாவுக்காக அர்ப்பணித்திருக்கிறேன். அப்படி இருந்தும் அடிப்படை மரியாதை கூட கிடைக்கவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்கும் வசதி, பயண ஏற்பாடுகள், என்னுடன் வரும் உதவியாளர்கள் எண்ணிக்கை போன்ற விஷயங்களிலும் கூட தேவையற்ற கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் சிம்ரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹோட்டல் வசதி முதல் விமான டிக்கெட் வரை பேரம் பேசும் சூழல் இருந்ததாகவும், அது தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற அனுபவங்களால் பாலிவுட்டில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உருவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சிம்ரனின் இந்த வெளிப்படையான கருத்துகள் தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய கலைஞர்களுக்கு தேசிய அளவில் கிடைக்கும் மரியாதை குறித்து மீண்டும் ஒரு முறை இந்த விவகாரம் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!