தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் S. S.ராஜமெளலி மற்றும் நடிகர் மகேஷ்பாபு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மலையாள நடிகர் பிரித்விராஜ் , சமீபத்தில் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, ஒரு முக்கியமான காட்சிக்காக மகேஷ் பாபு மற்றும் தன்னிடமிருந்து இயக்குநர் ராஜமௌலி 90-க்கும் மேற்பட்ட டேக்குகளை எடுத்ததாக தெரிவித்துள்ளார். ஒரு சின்ன தவறு கூட இல்லாமல் காட்சியை சரியாக பிடிக்க வேண்டும் என்ற அவரது முழுமையான கவனம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் பிருத்விராஜ், “30 ஆண்டுகள் காத்திருந்து முதல் வாய்ப்பு கிடைத்த இயக்குநர் போல ராஜமௌலி உழைக்கிறார்” என்று புகழ்ந்து பேசினார். காலை 7 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பிற்காக அதிகாலை 5 மணிக்கே செட் வந்துவிடும் அவர், உதவி இயக்குநர்களுடன் பலமுறை ஒத்திகை செய்து பிறகே காட்சியை தொடங்குகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கடின உழைப்பும், திட்டமிடலும் தான் ராஜமௌலியின் படங்களை உலக அளவில் வெற்றி பெறச் செய்கிறது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
Listen News!