கோவாவில் நடைபெற்ற 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரன்வீர் சிங், காந்தாரா படத்தில் வரும் சாமுண்டி தேவி கதாபாத்திரத்தை பேய் என்று குறிப்பிட்டு, அந்த படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்துக் காட்டியதை கிண்டல் அடித்தும் செய்கை காட்டியும் இருந்தார்.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பக்தர்களுக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. இதையடுத்து போலீசில் மத அவமதிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் மன்னிப்பு கேட்டிருந்தார். எனினும், அந்த மன்னிப்பு மனப்பூர்வமானதாக இல்லை என்றும், ரன்வீர் சிங்கின் மேலாளர் கையாளும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டதாகவும் மீண்டும் சர்ச்சைகள் கிளம்பின.

இதைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில், நடிகர் ரன்வீர் சிங் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாங்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை என்றும், கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன என்றும் ரன்வீர் தரப்பு வாதிட்டனர். மேலும் மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டி கோயிலுக்குச் சென்று மரியாதை செலுத்துவதாகவும் உறுதியளித்தனர்.
Listen News!