• May 04 2024

வாய் பேச முடியாத ஹீரோவாக அருள்நிதி மிரட்டும்... 'திருவின் குரல்' படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அருள்நிதி தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள 'திருவின் குரல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரிஷ் பிரபு வித்தியாசமான கதையம்சம் நிறைந்த வகையில் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இந்த படத்திற்கு பிரமாண்டமாக இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படமானது இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்து நோக்குவோம்.


கதைக்களம் 

அந்தவகையில் அன்பான அப்பா, அழகான முறைப்பெண், குடும்பம் என அனைத்து சொந்தங்களும் கிடைக்கப்பெற்ற வாய் பேச முடியாத - காது கேட்காத, மிகவும் கோபக்கார இளைஞரான அருள்நிதி, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிய தன் அப்பா பாரதிராஜாவை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வந்து அனுமதிக்கிறார். 

ஆனால் அங்கு கொலை கும்பல் ஒன்றுடன்  இவர்கள் எதிர்பாராமல் பகைத்து சிக்கிக் கொள்ள, அவர்களிடமிருந்து தன் மொத்த குடும்பத்தையும் காப்பாற்ற அருள்நிதி எடுக்கும் மிக நீண்ட ஒரு போராட்டமே ‘திருவின் குரல்’ திரைப்படம்.

அருள்நிதி - பாரதிராஜா நடிப்பு 

அந்தவகையில் வாய் பேச முடியாத, சரிவர காது கேளாத அதேசமயம் கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில் அருள்நிதி  எப்போதும்போல் அநாயசமாக பொருந்திப் போகிறார். அதுமட்டுமல்லாது சுற்றி நடப்பவற்றை துல்லியமாக கவனிப்பது, அப்பாவுக்காக, தன்னுடைய குடும்பத்துக்காக நாடி, நரம்பு துடிக்க போராடுவது, சண்டை என உடல்மொழி, பாவனைகளால் ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கின்றார்.

அதேபோல் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு துடிதுடிக்கும் அப்பா கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா பார்ப்பவர்கள் கண்ணில் பரிதாபத்தை வரவழைக்கிறார். படம் முழுக்க அவர் வந்தாலும் அவருக்கு ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும்.


பிற நடிகர்கள் பங்களிப்பு 

இப்படத்தினுடைய ஹீரோயின் ஆத்மிகா, கோலிவுட்டில் வந்துள்ள ஆயிரக்கணக்கான குடும்ப செண்டிமெண்ட் மசாலா படங்களில் வந்து கதாநாயகனுக்கு பக்கபலமாக இருக்கும் வழக்கமான ஹீரோயின் போலவே கதைக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு சத்தமில்லாமல் செல்கிறார்.

அத்தோடு மருத்துவமனைக்கு வரும் பெண்கள், நோயாளிகளிடம் ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளும் கொலைகார கும்பலாக நடிகர்கள் அஷ்ரஃப், சுரேஷ், சாந்தன், வினோத் நடித்துள்ளார்கள். இவர்களில் அஷ்ரஃப் தன் வில்லத்தனத்தால் திரையில் தோன்றும் இடங்களில் எல்லாம் பார்ப்பவர்களை அச்சுறுத்துகிறார். 

அதேபோன்று குழந்தை ஷர்மி, சித்ரா, அருள்நிதியின் பாட்டியாக வரும் சுபைதா என அனைவரும் தங்கள் வேலையை சரியாக செய்துகொடுத்து விட்டு செல்கின்றனர்.

அரசு மருத்துவமனை கதைக்களம்

கமர்ஷியல் படம் என்ற போதும், அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்படும் அவலம், அங்கு பணிபுரியும் வேடத்தில் வலம் வந்து அத்துமீறும் கொலைகார கும்பல் என அத்தனையுமே கற்பனையான கதையாகவே அமைந்திருக்கின்றது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களைக் குறிவைத்து இவர்கள் இயங்கினாலும், ஆயிரக்கணக்கான மக்கள் தினம் வந்து செல்லும் மருத்துவமனையில் இப்படி ஒரு கும்பல் இயங்குவது, டாக்டர், நர்ஸ் என இவர்களுக்கு அனைவரும் பலிகடாவாவது, ஒத்துழைப்பது என அரசு மருத்துவமனை மீதான பொது மாயைகளை ஊதிப் பெருதாக்கி படமாக கொடுத்திருக்கிறார் இப்படத்தினுடைய இயக்குநர்.

அதுமட்டுமல்லாது கொரோனா ஊரடங்கு பாதிப்புகள், பொருளாதார வீழ்ச்சியின் நடுவே அரசு மருத்துவமனைகளை மட்டுமே அணுக சக்தி உடைய நடுத்தர, ஏழை  மக்கள் வாழும் நாட்டில், தேவையில்லாத பயத்தைக் கொடுக்கும் வகையில் படத்தின் கதை, பேருக்கு படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் காவல் துறை என லாஜிக் ஓட்டைகள் படத்தில் உள்ளன எனக் கூற முடியும்.

அப்பா - மகன் செண்டிமென்ட்

அந்தவகையில் கதையின் அடிநாதமாக இருக்கும் அப்பா - மகன் சென்டிமெண்ட் எதிர்பார்த்த அளவு படத்தில் கடத்தப்படவில்லை. கதைக்குள் சீக்கிரமாகப் பயணித்து விறுவிறுவென்று சென்று விட்டாலும், அதன்பின் பரிதாபத்தை மட்டுமே வரவழைக்கும் நோக்கில் மருத்துவமனைக்குள்ளேயே சுழன்றடிக்கும் திரைக்கதை பார்ப்பவர்களுக்கு அலர்ட்ஸியைத் தருகிறது.

அத்தோடு கதைக்குள் நம்மை ஒன்றவைக்கும் ஆனால் மிக நீண்ட முதல் பாதி, பொறுமை இழந்து மூச்சுமுட்ட வைக்கும் இரண்டாம் பாதி, வில்லன் கும்பலை ஒழித்துக்கட்டிய பின்னும் நீண்டு நெஞ்சைப் பிழியும் சோகம், இவற்றின் நடுவே மொத்த படத்தையும் அருள்நிதி தோளில் சுமந்து இறுதிவரை நம்மை கூட்டிச் சென்று கரையேற்றுகின்றமை பாராட்டக் கூடிய விடயம் தான். 

அதேபோன்று சாம். சி.எஸ் வழக்கம்போல் ரசிகர்களை பாடல்களில் ஏமாற்றுகிறார். ஆங்காங்கே பின்னணி இசை கதைக்கு வலுசேர்க்கிறது மற்றும் பாடல்கள் போரடிக்கவும் வைக்கிறது.

அதுமட்டுமல்லாது சண்டைக் காட்சிகள் படத்துக்கு வலு சேர்க்கின்றன. 

 தொகுப்பு 

அருள்நிதி, பாரதிராஜா, வில்லனாகத் தோன்றும் அஷ்ரஃப் என நல்ல நடிகர்கள் இருந்தும் தவறான கதைக்களத்தால் தான் நினைத்ததை படத்தில் கொண்டு வர முடியாமல் திணறி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ஹரீஷ்.

Advertisement

Advertisement

Advertisement