தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. அரசியல் பின்னணியுடனும் சமூக கருத்துக்களுடனும் உருவாகியுள்ள இந்த படம், ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்சார் தொடர்பான சில பிரச்சனைகளால் அந்த நாளில் படம் வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியீட்டுக்காக பல நாட்களாக காத்திருந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதால், சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து சென்சார் குழு கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தரப்பும் இயக்குநர் குழுவும் சென்சார் குழுவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், திரையுலகில் இருந்து விஜய்க்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. பல நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜிவி பிரகாஷ்குமார் தனது சமூக வலைத்தளப் பதிவில், “ஜனநாயகன் எதிர்கொள்ளும் அனைத்து தடைகளையும் தாண்டி, மிக விரைவில் திரையில் மேஜிக்கை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வெளியீட்டு நாள், ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய திருவிழாவாகவே அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வார்த்தைகள் விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!