தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டு வரும் சவுந்தர்யா ரஜினிகாந்த், சமீபத்தில் வெளியான தனது புதிய படமான With Love படத்தின் வெற்றியை மிகுந்த உணர்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். இந்த படத்தை இயக்கியவர் மதன். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘வித் லவ்’ படம் வெளியானதும் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. கதையின் எளிமை, உணர்ச்சி மிக்க காட்சிகள் மற்றும் புதுமையான காட்சியமைப்பு ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் வெற்றியை முன்னிட்டு, படக்குழுவினர் ஒன்று சேர்ந்து சிறப்பு கொண்டாட்டம் நடத்தினர்.
அந்த நிகழ்வில் பேசும்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த சில வார்த்தைகள் தற்போது சமூக வலைதத்ளங்களில் வைரலாகி வருகின்றன.
அதாவது, வெற்றி கொண்டாட்டத்திற்குப் பிறகு, படக்குழுவினரை அழைத்துக்கொண்டு தனது தந்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைச் சந்திக்க சென்றதாக சவுந்தர்யா கூறினார்.

“என் அப்பா என்னை கட்டிப் பிடித்து, ஒரு மாதிரி சிரித்தார். அந்த சிரிப்பில் ஒரு பெருமை இருந்தது. அப்போது நான் அவரிடம் கேட்டேன்...‘அப்பா, இது தான் வெற்றியா?’ என்று,” என அவர் உருக்கமாக பகிர்ந்தார்.
அந்த தருணம் தான் தனது 18 ஆண்டுகால திரைப்பயணத்தில் மறக்க முடியாத நிமிடம் என்று சவுந்தர்யா கூறியுள்ளார். மேலும், “அப்பாவின் அந்த சிரிப்பை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. 18 ஆண்டு கால திரைப்பயணத்தில் நான் பெற்ற முதல் வெற்றி இது. 'வித் லவ்' படக்குழுவால் தான் நிகழ்ந்தது.” என்றும் கூறியிருந்தார்.
சவுந்தர்யாவின் இந்த உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அப்பா-மகள் உறவு எவ்வளவு ஆழமானது என்பதை வெளிப்படுத்துகின்றது.
Listen News!