• Jun 22 2026

அம்மாவ தெய்வமா பாக்காதீங்க.. அவங்களுக்கும் அது முக்கியம்.? விவாதத்தை கிளப்பும் சசி பேட்டி

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பல்வேறு இயக்குநர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, நூறு சாமி படத்தின் பின்னணியை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இந்தக் கதை இப்பவும் நடக்குதாப்பா. ஒரு காலத்துல மட்டும் இல்ல, இன்னைக்கும் நம்ம ஊர்ல பல இடங்களில் விதவை பெண்கள் இப்படித்தான் வாழ்கிறாங்க. கணவனை இழந்த ஒரு பெண், தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் தொடங்க நினைத்தாலே இந்த சமூகம் அவளை எப்படி பார்க்குது, எப்படி கேள்வி கேக்குது என்பதுதான் இந்தப் படத்தின் மையம்.

கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கினோம். ஒரு பெண் தனது கணவரை இழந்த பிறகு, இரண்டு குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறார். ஆனால் அவருக்கு மறுமணம் என்ற ஒரு ஆசை வந்தால், அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்கிறதா என்பதுதான் படத்தின் முக்கிய கேள்வி.


ஒரு ஆண் தனது மனைவியை இழந்தால் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று சமூகம் சொல்கிறது. ஆனால் ஒரு பெண் அதே முடிவை எடுத்தால் ஏன் இவ்வளவு எதிர்ப்பு வருகிறது? அவளுக்கும் உணர்வுகள் இருக்காதா? அவளுக்கும் வாழ்க்கை வாழ ஆசை இருக்காதா? என்ற கேள்வியை படம் முழுவதும் எழுப்பியிருக்கிறோம்.

அத்துடன், உடல் தேவை என்பது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இயற்கையாகவே தேவையான ஒன்று. முதலில் அதை நாம் எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கைக்குச் சாப்பாடு எவ்வளவு முக்கியமோ, தூக்கம் எவ்வளவு முக்கியமோ, அதேபோலத்தான் உடல் தேவையும் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது. இதைத்தான் மக்கள் மனம் கோணாதபடி, யாரும் தியேட்டரில் முகம் சுளிக்காதபடி, மிக நேர்த்தியான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். 


ஏனென்றால், இதுதான் இந்த நூறு சாமி படத்தினுடைய 'கோர் பாயிண்ட்'. உடல் தேவை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று, ஒரு பெண்ணுக்கும் அந்த உணர்வுகள் இருக்கிறது. அவளுக்கு 42 வயதோ அல்லது 60 வயதோ ஆகிவிட்டாலும் அவளது தனிமைக்கும், தேவைக்கும் ஒரு துணை அவசியம் என்பதை மிகத் துணிச்சலாகப் பேசியிருக்கும் திரைப்படம் தான் இந்த நூறு சாமி.

சுவாசிகா இந்தப் படத்தில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். அவர் நடித்த பல படங்களில் இருந்தும் வித்தியாசமான ஒரு நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம். அதேபோல் விஜய் ஆண்டனியும் இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய எளிமையான நடிப்புதான் அந்தக் கதாபாத்திரத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

இந்தப் படம் ஒரு ஆவணப்படம் போல இருக்கக் கூடாது என்பதற்காகவே உணர்வுகளையும், பொழுதுபோக்கையும் சேர்த்து எடுத்திருக்கிறோம். படம் முடிந்த பிறகு பார்வையாளர்களின் மனதில் சில கேள்விகள் எழ வேண்டும். அந்த கேள்விகள் சமூக மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்று சசி தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் இன்னும் பேசத் தயங்கப்படும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘நூறு சாமி’, தற்போது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement