விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் அதிக வருமானம் ஈட்டிய போட்டியாளராக, டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட திவ்யா கணேஷ் முதலிடத்தில் உள்ளார். வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சியில் நுழைந்த அவருக்கு ஒரு நாளுக்கு ரூ.30,000 சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 80 நாட்கள் தங்கியதற்காக ரூ.24 முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளமாகவும், டைட்டில் வின்னர் பரிசுத்தொகையான ரூ.50 லட்சத்தில் வரி பிடித்து மிச்சம் போக ரூ.35 லட்சமும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் மொத்தமாக ரூ.60 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெற்றுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக, இறுதிப்போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத் சுமார் ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ஒரு நாளுக்கு ரூ.8,000 சம்பளம் பேசப்பட்ட நிலையில், 100 நாட்களுக்கு ரூ.8 லட்சம் சம்பளமும், பணப்பெட்டித் தொகையில் வரி பிடித்தம் போக கிடைத்த தொகையும் இதில் அடங்கும்.

மற்ற போட்டியாளர்களைப் பொறுத்தவரை, வைல்டு கார்டு மூலம் நுழைந்த பிரஜின் மற்றும் சாண்ட்ரா ஆகியோருக்கு ஒரு நாளுக்கு ரூ.30,000 வரை வழங்கப்பட்டதாகவும், ஆரம்பக்கட்ட போட்டியாளர்களான பிரவீன் காந்தி, அப்சரா, சபரி மற்றும் திவாகர் ஆகியோருக்கு ஒரு நாளுக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலும் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரோரா மற்றும் வியானாவுக்கு ஒரு நாளுக்கு ரூ.12,000 சம்பளமாகவும், கனி, எஃப்.ஜே., துஷார் மற்றும் ஆதிரை ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டு ‘ரெட் கார்டு’ பெற்று வெளியேற்றப்பட்ட விஜே பார்வதி மற்றும் கமருதீன் ஆகியோருக்கு பிக் பாஸ் ஒப்பந்த விதிகளின்படி சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெறும் மூன்று நாட்களில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நந்தினிக்கும் குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!