கோலிவுட்டில் 90களில் இருந்து இன்று வரை தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் தேவயானி. பல வெற்றி படங்களின் மூலம் குடும்ப ரசிகர்களின் மனதில் நிலைத்த இடம் பெற்ற அவர், இயக்குநர் ராஜகுமாரன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்களில் இளைய மகளான இனியா தற்போது தனது குரல் திறமையால் கவனம் ஈர்த்து வருகிறார். சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு மேடைகளில் பாடி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு, தனது குரல் வளத்தால் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். இதனால், இனியா எதிர்காலத்தில் பெரிய பின்னணி பாடகியாக வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நடிகை தேவயானி தனது மகளுக்காக மேடையில் வைத்து நேரடியாக வாய்ப்பு கேட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் அவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியில் விருது வழங்கும் வாய்ப்பு தேவயானிக்கு கிடைத்தது. அப்போது பேசிக்கொண்டிருந்த தேவயானி, சாய் அபயங்கரின் குடும்பத்தினருடன் இருந்த பழைய தொடர்புகளை நினைவுகூர்ந்தார்.
அதாவது, “முன்பு சாய் அபயங்கரின் அப்பா, அம்மாவுக்கு ரசிகர்களாக இருந்தோம். இப்போது அவருக்கே ரசிகர்களாக இருக்கிறோம். நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்,” என்று பாராட்டிய அவர், அதன்பின் தனது மகளைப் பற்றியும் பேசினார்.

“எனது மகளும் நன்றாக பாடுவாள். அவள் உங்கள் தீவிர ரசிகை. உங்கள் இசையில் பாட வேண்டும் என்பது அவளின் ஆசை. வாய்ப்பு இருந்தால் அழைத்து கொடுங்கள்!” என்று மேடையிலேயே அன்புடன் கேட்டுக் கொண்டார்.
தேவயானியின் இந்த உரை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. திரையுலகில் பெரிய அனுபவம் கொண்ட நடிகையாக இருந்தாலும், தனது மகளின் கனவிற்காக எளிமையாக வாய்ப்பு கேட்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
Listen News!