சுந்தர் சி – விஷால் கூட்டணியில் ஏற்கனவே ‘மதகஜ ராஜா’, ‘ஆம்பள’ போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களுமே முழு காமெடி, ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு படங்களாக இருந்து ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து, சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானாலும், பல மாதங்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், தற்போது அந்த கூட்டணி உறுதியாகி, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அவர்கள் இணையும் புதிய படத்திற்கு 'புருஷன்' என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், நேற்று வெளியான இந்த படத்தின் ப்ரோமோவில், தமன்னா மனைவியாகவும், விஷால் வீட்டு வேலைகள் செய்யும் கணவராகவும் காட்சியளிக்கின்றனர்.

அப்போது, யோகி பாபு நடிக்கும் ஒரு சீரியலை பார்த்து, தமன்னா அவரின் பெரிய ரசிகையாக மாறுகிறார். அந்த நேரத்தில் யோகி பாபு வீட்டிற்கு வர, அவருக்கு டீ போட்டு கொடுக்குமாறு விஷாலிடம் கூறுகிறார்.
விஷால் கிச்சனுக்குள் டீ போட்டுக் கொண்டு இருக்கும் போது, அங்கு நுழையும் ரவுடிகளை தனியாக எதிர்த்து அடித்து விரட்டுகிறார். இதை பார்த்த யோகி பாபு அமைதியாக அங்கிருந்து சென்றுவிடுகிறார். ஆனால் இந்த சம்பவம் குறித்து தமன்னாவுக்கு தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து, 'புருஷனா இருக்கிறது முக்கியம் இல்ல. புருஷன் பொறுமையா இருக்கிறதும் முக்கியம் ' என்று யோகி பாபு கூறும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு முழு காமெடி–என்டர்டெய்னர் படம் உருவாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!