பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையும், நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தவருமான நோரா ஃபதேஹி, நேற்று மதியம் மும்பையில் நடந்த கார் விபத்தில் சிக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் நோரா சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பது நிம்மதியான செய்தியாக அமைந்துள்ளது.

கிடைத்த தகவல்களின்படி, நோரா ஃபதேஹி பயணித்துக் கொண்டிருந்த காரை, குடிபோதையில் இருந்த ஒருவர் வேகமாக வந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் காரணமாக, நோராவின் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து, நடிகை நோரா ஃபதேஹி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர்,“நான் நலமாக தான் இருக்கிறேன். அந்த நபர் வந்து மோதியபோது என் காரில் மிகவும் மோசமாக சேதம் ஏற்பட்டது. என் தலையை காரின் ஜன்னலில் மோதிக்கொண்டேன். என் கண் முன் வாழ்க்கையே ஓடி போனது போல இருந்தது. அந்த அனுபவம் மிகவும் பயமளித்தது.” என்று தெரிவித்துள்ளார்.

நோரா ஃபதேஹியின் இந்த பதிவை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆறுதல் மற்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Listen News!