இயக்குநர் ரவி மரியா இயக்கியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, வழக்கம்போல தனது தனித்துவமான பேச்சால் அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளார்.
அதன்படி படம் குறித்து பேசிய அவர், “இந்த படத்துல கதையின் நாயகன் ரவி மரியாதான். ஆனா அவன் சொல்ற மாதிரி நல்லவன் கிடையாது. இருக்கறதுலயே இழிச்சவாயன் நீதான். உன்ன வந்து நான் கெடுத்து உன்ன முதலமைச்சரா கொண்டாறேன்றதுதான் கதை” என்று நகைச்சுவையாக கூறியதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த படத்துல உனக்கு ஒன்னுமே தெரியாம நீயே முதலமைச்சர் ஆயிடுற. உண்மையிலேயே இந்த படம் தேர்தலுக்கு முன்னாடியே வந்திருக்கணும். நான் கூட தேர்தலுக்கு முன்னாடி ரிலீஸ் பண்ணலாம்னு சொன்னேன். ஆனா சில காரணங்களால தள்ளிப் போச்சு” என்றார்.

படத்தின் கதையை பாராட்டிய ராதாரவி, “இதுல அவன் வச்சிருக்கிற சில விஷயங்களை எந்த கவர்மெண்டும் சால்வ் பண்ண முடியாது. ‘நான் சால்வ் பண்ணுறேன்’ன்னு எந்த அரசாங்கமும் சொன்னா அது தப்புதான். அவ்வளவு சிக்கலான விஷயங்களை கதையில கொண்டு வந்திருக்கான்” என தெரிவித்தார்.
இயக்குநர் ரவி மரியாவை மீண்டும் கலாய்த்த அவர், “அவன் பாக்குறதுக்கு அப்பாவி மாதிரி இருப்பான். ஆனா அப்பாவியே கிடையாது. எங்களையெல்லாம் ஏமாத்திதான் இந்த படத்துல நடிக்க கூட்டிட்டு வந்திருக்கான். பேசுன காசுல இருந்து கொஞ்சம் குறைச்சான், அப்புறம் நடிக்க ஆரம்பிச்ச பிறகும் கொஞ்சம் குறைச்சான். இதுக்கு அப்புறம் நம்ம விட்டுட்டு போக முடியுமா?” என்று நகைச்சுவையாக கூறினார்.
தயாரிப்பாளர் குறித்து பேசிய ராதாரவி, “இந்த படத்துல முதலீடு பண்ணியவர்கள் கவனமா இருக்கணும். பணம் வரும்போது இவனை தனியா உட்கார வச்சுதான் வாங்கணும். இல்லன்னா அதுலயும் கொஞ்சம் குறைச்சிருவான்” என்று கிண்டலடித்தார்.
மேலும், “இந்த படத்துல பல அரசியல் சம்பவங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் இருக்கு. அதனால படம் வெளியான பிறகு நம்மள சொல்றாங்களோ, இல்ல வேற யாரையாவது சொல்றாங்களோன்னு எல்லா கட்சிக்காரர்களும் வந்து கேட்கலாம். எங்க மேல கேஸ் கூட வரலாம். ஆனா படம் ரொம்ப பிரமாதமா வந்திருக்கு” என்றார்.
இயக்குநர் ரவி மரியாவின் திறமையை பாராட்டிய ராதாரவி, “எப்படி இவ்வளவு பேரை நம்ப வச்சு இந்த படத்துல நடிக்க வச்சான்னு தெரியல. அதுதான் அவனோட பெரிய திறமை. ஆனா ஒரு விஷயம் மட்டும் நிச்சயம், ரவி மரியா இந்த படத்துல நல்ல வேலை பண்ணிருக்கான்” என கூறினார்.
இறுதியாக ரசிகர்களிடம் பேசிய அவர், “இந்த படத்தை தியேட்டர்ல போய் பாருங்க. தியேட்டர்ல பார்த்தாதான் அதோட முழு எஃபெக்ட் தெரியும். எல்லாரும் தியேட்டர்ல போய் படம் பாருங்க” என்று வேண்டுகோள் விடுத்தார்.
Listen News!