தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் நடிகைகளில் முக்கியமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ் மொழி மற்றும் சினிமா மீது கொண்டிருந்த ஆர்வம் அவரை நடிகையாக மாற்றியது. குறுகிய காலத்திலேயே பல கணிசமான படங்களில் நடித்து, ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

நடிப்பைத் தாண்டியும், சமூகத்தில் நடைபெறும் விஷயங்கள் குறித்து திறம்பட கருத்து தெரிவிக்கும் நடிகையாகவும் நிவேதா அறியப்படுகிறார். சமூக வலைத்தளங்களில் அவர் பகிரும் கருத்துக்கள் பல நேரங்களில் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், சமீபத்தில் அவர் தனது ‘X’பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த பதிவில், “உங்கள் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெறுப்பு, தவறான தகவல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு தலைவரான உங்களுடையது. தலைமை என்பது எப்போதும் பாரபட்சமானது அல்ல. தேர்தல் நெருங்கி வரும் கால கட்டத்தில் இப்படி மோசமாக நடந்து கொள்வது உங்கள் கட்சிக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு வெளியானதும், அது யாரை குறிவைத்து எழுதப்பட்டது என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவலாக எழுந்தது. பலரும் இதன் பின்னணி குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, சில நெட்டிசன்கள் இந்த பதிவு விஜய்யின் த.வெ.க கட்சியை நோக்கி இருக்கலாம் என கூறி வருகின்றனர்.
அதே சமயம், இன்னொரு தரப்பினர், இது பொதுவாக அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகள் குறித்து சொல்லப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்றும் வாதிடுகின்றனர். எந்தக் கட்சியையோ அல்லது நபரையோ நேரடியாக குறிப்பிடாமல் கூறப்பட்ட இந்த பதிவு, பல்வேறு விளக்கங்களுக்கு இடம் கொடுத்துள்ளது.
Listen News!