• Jan 22 2026

விதிமுறைகளை மீறினால் படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டோம்.! திருப்பூர் சுப்பிரமணி காட்டம்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரையுலகம் பல மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில், திரையரங்குகளும், OTT தளங்களும் நேரடி போட்டியாளர்களாக மாறியுள்ளன. குறிப்பாக, திரைப்படங்கள் வெளியான சில வாரங்களுக்குள் OTT தளங்களில் வெளியாகும் நிலை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துவிட்டது. இதனால், திரையரங்குகளின் வருமானம் குறைந்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் பல முறை கவலை தெரிவித்துள்ளனர்.


தற்பொழுது பல திரைப்படங்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள், ரிலீஸான 3 முதல் 4 வாரங்களுக்குள் OTT தளங்களில் வெளியிடப்படும் சூழல் அதிகரித்துள்ளது. இது அதிகளவான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வர முடியாமல் போகச் செய்கிறது.

திரையரங்க சங்கங்கள், தயாரிப்பாளர் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரிடையே இந்த பிரச்சனை குறித்து பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் ஒருமித்த தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.


இந்நிலையில், தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினரான திருப்பூர் சுப்பிரமணி, இப்பிரச்சனை குறித்து தீவிரமாக பேசியுள்ளார். அவர் திரையரங்கு உரிமையாளர்களிடம் புதிய தீர்மானத்தை முன்வைத்து முக்கிய கோரிக்கையைக் கூறியுள்ளார்.

அவரின் கூற்றுப்படி, “ஜனவரி முதல் ரிலீஸ் ஆகும் அனைத்து படங்களும், ரிலீஸான 8 வாரங்களுக்கு பிறகே OTT-யில் வர வேண்டும். இதை மீறும் படங்களை திரையரங்குகளில் எங்களால் வெளியிட முடியாது.”

மேலும், " பெரிய நடிகர்கள் தற்போது வீட்டிலேயே இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு 100–200 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்களிடம் பணமே இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்பு மிகப் பெரிய தொகைகளை நடிகர்களுக்கு வழங்கி வந்ததால், சம்பள உயர்வு கட்டுப்பாட்டை மீறி வளர்ந்துள்ளது. ஆனால் அந்த நிறுவனங்கள் பின்னால் வந்த பிறகு, தயாரிப்பாளர்களுக்கு அந்த செலவுகளை தாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது." என்றார். 

இந்த அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினருடன் டிசம்பர் 9-ம் தேதி முக்கிய கூட்டம் நடைபெறவிருக்கிறது எனவும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement