தமிழர்களின் வாழ்வியல் தத்துவமாக போற்றப்படும் திருக்குறளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘திருக்குறள்-2’ திரைப்படம் தற்போது சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்து வருகிறது.
கடந்த ஆண்டு வெளியான திருக்குறள் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த திரைப்படத்தின் ஆங்கில பதிப்பு ‘Once Upon a Time in Hindustan’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் திருவள்ளுவராக நடித்த கலைச்சோழன் மீண்டும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வாசுகி கதாபாத்திரத்தில் தனலட்சுமி மீண்டும் இணைந்துள்ள நிலையில், ஒளிப்பதிவை எட்வின் சகாய் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், படத்தின் ஆங்கில பதிப்பிலிருந்து 4 நிமிட முன்னோட்டக் காட்சி, அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் சங்க பேரவையின் சிறப்பு நிகழ்வில் திரையிடப்பட்டது. அந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றிருந்த திருக்குறளின் அறம், மனிதநேயம் மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் அங்கு கலந்து கொண்ட அமெரிக்கத் தமிழர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.

முன்னோட்டத்தை பார்த்த சிலர், "இன்றைய நவீன உலகில் திருக்குறள் வலியுறுத்தும் அறநெறிகளை நடைமுறையில் பின்பற்றுவது சாத்தியமா?" என்ற கேள்வியை இயக்குநரிடம் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த இயக்குநர், "காலம் மாறலாம், மனிதர்களின் வாழ்க்கை முறை மாறலாம். ஆனால் அறம் என்பது எந்தக் காலத்திலும் அழியாத வாழ்க்கை நெறி. அது தலைமுறைகள் கடந்தும் மனிதர்களை வழிநடத்தும்" என்று தெரிவித்தார்.
இயக்குநரின் இந்த பதில் நிகழ்வில் பங்கேற்றவர்களின் பாராட்டைப் பெற்றதுடன், ‘திருக்குறள்-2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலக அரங்கில் மீண்டும் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படம் அமையும் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
Listen News!