தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக ‘ராமாயணா’ உருவாகி வருகிறது. நிதிஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இத்திரைப்படத்தில், ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷ்ஷும் நடித்து வருகின்றனர்.
சுமார் 2,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம், இந்தியத் திரையுலகின் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இப்படம் எதிர்வரும் நவம்பர் 5, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ‘ராமாயணா’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வில் நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டு பேசிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அந்நிகழ்வில் பேசிய அவர், “ராவணன் அவ்வளவு கெட்டவன் கிடையாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ராவணன் இருக்கிறான். அவனைச் சரியாகக் கண்டறிந்து நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவியின் இந்தக் கருத்து வெளியானதைத் தொடர்ந்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் எதிர்மறையான குணங்களை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கருத்தின் நோக்கம் எனப் பாராட்டுகின்றனர்.
அதேவேளை, ராவணனைப் பற்றிய இத்தகைய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது எனச் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் சாய் பல்லவியின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!