இந்திய இசை உலகில் மிகப் பிரபலமான மற்றும் அதிக ரசிகர்களைக் கொண்ட பின்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்பவர் ஸ்ரேயா கோஷல். தனது இனிமையான குரலாலும், பல்வேறு மொழிகளில் பாடிய அற்புதமான பாடல்களாலும் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பல ஆண்டுகளாக இசை உலகில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஸ்ரேயா கோஷல், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இசை ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ள அவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் கூறிய ஒரு கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக மேடையில் பாடுவது மற்றும் ‘லிப்-சிங்’ குறித்து அவர் தெரிவித்த கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, " எனக்கு பின்னணி பாடகராக இருப்பதை விட மேடையில் பாடுவதே மிகவும் பிடிக்கும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடலுக்கு உதடுகளை மட்டும் அசைக்கும் 'லிப்-சிங்' முறையை விரும்ப மாட்டேன். அது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நான் அப்படி செய்ய வேண்டிய சூழல் வந்தால், அன்றே நான் பாடுவதை நிறுத்திவிடுவேன். எனது குரல்வளம் எனக்கு துணையாக இருக்கும் வரை மேடையில் நின்று பார்வையாளர்களுக்காக நேரடியாக பாடுவதையே விரும்புகிறேன்." என்று கூறினார் ஸ்ரேயா கோஷல்.
இந்த கருத்துகள் இசை ரசிகர்களிடையே தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பலரும் அவரது நேர்மையான பேச்சையும், இசைக்கான அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக நேரடியாக பாடுவதற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!