ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நடிகர் விஜய்யின் புதிய படம் ‘ஜன நாயகன்’ வெளியீடு தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு தற்போது ஏமாற்றமாக மாறியுள்ளது. தணிக்கைச் சிக்கலால் படம் வெளியீடு தாமதமாகி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி வரை படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பில்லை என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் ஆரம்பம் முதலே பெரும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. வெளியீட்டை முன்னிட்டு வெளிவந்த போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ‘ஜன நாயகன்’ படம் வசூலில் சாதனைகளை படைக்கும் என திரையுலக வட்டாரங்கள் கணித்திருந்தன.
இந்நிலையில், படம் தணிக்கை வாரியத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியது. சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து எதிர்ப்புகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகவில்லை.

இந்நிலையில், கனடாவில் படத்தை வெளியிட இருந்த விநியோகஸ்தரான York Cinemas முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ஜனநாயகன்’ படம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வெளியாக வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளுக்குமான பணத்தை திரும்பப் பெறலாம் என்றும் York Cinemas தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!